இந்த சம்பவம் நிஜத்தில் திபத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது;இதையும் சீனாவில் நிகழ்ந்ததாக சீனா தம்பட்டம் அடிக்கத் துவங்கியிருக்கிறது.திபத் ஒரு புத்தமத நாடு;அதே சமயம் மலைத்தொடர்களால் சூழப்பட்ட நாடு;புத்த சமயத்தின் மடங்கள் எல்லா ஊர்களிலும் இருக்கின்றன;வெகுதூரத்தில் இருக்கும் ஒரு மடாலயத்தில் ஒரு துறவி இருந்தார்;அவர் தனது சீடனை அழைத்து, ‘நீ தலைமை மடாலயத்துக்குச் சென்று, நான் அனுப்பியதாகச் சொல்;எனக்கு வயதாகிறது;எனவே,எனக்குப் பிறகு இந்த மடத்துக்கு அடுத்த தலைமைத் துறவி தேவை;என்பதையும் சொல்’என்று கூறினார்.அந்த சீடனும் அங்கிருந்து புறப்பட்டான்;பல மாதங்கள் பயணித்து,பல மாநிலங்களையும் கடந்து தலைமை மடாலயத்தை வந்தடைந்தான்;
ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு,தலைமை துறவியை சந்தித்து,தனது குருவின் சூழ்நிலையைச் சொன்னான்;அதற்கு தலைமைத் துறவி,
“சரி,நீ நாளைக்கு நமது தலைமை மடாலயத்தில் இருக்கும் பத்தாயிரம் துறவிகளை அழைத்துச் செல்” என்றார்.இவனோ குழம்பிப் போனான்;ஒரே ஒரு தூரதேச மடாலயத்துக்கு ஒரு துறவிதான் தேவை;இவரோ பத்தாயிரம் பேர்களை அழைத்துச் செல்லச் சொல்கிறாரே என்று சிந்தித்தவன்,அவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசவில்லை;
மறுநாள் இந்த சீடனுடன் பத்தாயிரம் துறவிகள் அந்த தூரதேச மடலாயம் நோக்கிப் புறப்பட்டார்கள்;சில வாரங்களில் அந்த பத்தாயிரம் துறவிகளின் எண்ணிக்கை ஐந்தாயிரமாக குறைந்தன;மேலும் சில வாரங்களில் ஐந்தாயிரம் ஆயிரமாகச் சுருங்கியது;அந்த தூரதேச மடாலயம் இருக்கும் மாநிலத்தை எட்டும் போது ஆயிரம் சில நூறுகளாக குறைந்து போனது;உடன் வந்த பத்தாயிரம் சீடர்கள் ஒவ்வொருவராக ஆங்காங்கே கழன்று கொண்டனர்;சிலர் திருமணம் செய்து கொண்டனர்;பலர் தமது பெற்றோர்களை சந்திக்கப் போய்விட்டனர்;சிலர் வழியில் இருக்கும் சிற்றரசுகளிடம் ஆஸ்தான குருவாக இணணந்து கொண்டனர்;இறுதியில் அந்த மடாலயத்தை அந்த சீடன் மட்டுமே அடைந்தான்;
சீடனைப் பார்த்த தூரதேச மடாலயத்தின் துறவி, “எனக்குப் பிறகு இந்த மடாலயத்துக்கு நீயே தலைமைத் துறவி” என்று அறிவித்துவிட்டார்.அந்த சீடனிடம் என்ன நடந்தது? என்று கூட கேட்கவில்லை;
இந்த கதையை ஓஷோவின் புத்தகங்களில் அடிக்கடி வாசிக்கலாம்;
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது வெறும் கதை அல்லது நிஜத்தில் நிகழ்ந்த சம்பவம் என்று எண்ணிக் கொள்ளலாம்.இந்த கதையில் ஒளிந்திருக்கும் ‘கரு’ என்ன தெரியுமா?
நாம் பத்தாயிரம் விதமான எண்ணங்களை ஒவ்வொரு நொடியும் எண்ணுகிறோம்;ஆனால்,நமது வாழ்நாளின் முடிவில் ஒரே ஒரு நோக்கத்தில் மட்டுமே சாதிக்கிறோம்;நமது கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்கள்,சம்பவங்கள்,நிகழ்ச்சிகள் பல கோடி நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இருக்கின்றன;அவைகளை நாம் உணரும்போது நமது இளமை நம்மைவிட்டு விடைபெற்றிருக்கும்;வாழ்க்கைப் பற்றிய அனைத்துப் புரிதல்களும் நம்முடன் நிரம்பியிருக்கும்;துடிப்பை மட்டும் இழந்திருப்போம்;ஏனெனில்,இந்த உலகில் நல்ல விஷயங்களும்,நமக்குத் தூண்டுகோல்களாக இருக்கும் ஆட்களும் மிக மிக மிக அபூர்வம்;ஆனால்,நம்மை திசை திருப்பும் சம்பவங்களும் நம்மை,நமது நோக்கங்களை சிதறடிக்கும் மனிதர்களையும் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருப்போம்.
No comments:
Post a Comment